ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி… தஞ்சையில் பெரும் சோகம்

தஞ்சாவூர்:
நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மானம்புசாவடி ஆடக்கார தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (25). இவருக்கு கோகிலா என்ற மனைவியும், நிக்சன் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. ஸ்டீபன்ராஜ், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தெருவில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் வேலைப் பார்த்து வந்தார்.

இவரும், அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை – விளார் புறவழிச்சாலையில் உள்ள புது ஆற்றங்கரையில் குளிக்க சென்றனர். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாக குளியலில் ஈடுபட்டிருந்தனர்.

தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறிது நேரத்திற்கு பின்னர் ஸ்டீபன் ராஜால் நீந்த முடியவில்லை. அப்போது அவரது நண்பர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என்று ஸ்டீபன் ராஜை அழைத்துள்ளனர். ஆனால் அவரால் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

தொடர்ந்து ஸ்டீபன்ராஜ் நண்பர்கள் அவரை ஆற்றில் இறங்கி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஸ்டீபன் ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நெய்வாய்க்கால் அருகே ஸ்டீபன்ராஜ் உடல் கரை ஒதுங்கியது. அங்கு சென்று போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!