இணங்க மறுத்த, 13 வயது சிறுமியின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை

ஆத்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த, 13 வயது சிறுமியின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் தினேஷ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், குற்றவாளிமீது சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி குண்டர் சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி. 8வது படித்து வரும் 13 வயதான இந்த சிறுமியை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவர், அரிவாளுடன் நுழைந்து சிறுமி ராஜலட்சுமி தலை முடியை பிடித்து வெளியே இழுத்துச்சென்றார். தடுக்க முயன்ற சின்னப்பொன்னுவை தள்ளிவிட்ட தினேஷ் குமார், தாயின் கண்முன்னே சிறுமியின் கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் காரணமாக அங்குள்ளவர்கள் தினேஷ்குமாரை பிடித்து காவல்நிலையில் ஒப்படைத்தனர். விசாரணையில், தோட்டத்திற்கு பூப்பறிக்க வரும் சிறுமி ராஜலட்சுமியை தினேஷ்குமார் பலமுறை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, கடந்த 22ம் தேதி இரவு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, கூச்சலிட்டபடி வீட்டிற்கு ஓடியதால், சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் தினேஷ்குமார் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் தான் கொல்லவில்லை முனி என் உடம்பில் வந்து கொன்றது என மாற்றி மாற்றி மன நலம் பாதிக்கப்பட்டவர் போல பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி மீது கடுமையான பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

அதைத்தொடர்ந்து, தினேஷ்குமார் மீது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார். ஆத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து சிறுமி கொலை செய்யப்பட்டு 9 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவரிடம் குற்றவாளி யான தினேஷ் குமாருக்கு பிணை கொடுக்கக் கூடாது குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு இழப்பீடும் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகினி தினேஷ்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Sharing is caring!