இதுதானா அந்த எளிமை… பல்லிளித்து போன எளிமை… இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்
இஸ்லாமாபாத்:
இதுதான் உங்க எளிமையாங்க… ரொம்ப எளிமைங்க என்று விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார் பாக்., பிரதமர் இம்ரான்கான்.
பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான், எளிமையான வாழ்க்கையை பின்பற்ற போவதாக கூறினார். ஆனால், வீட்டில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் அவர் ஹெலிகாப்டரில் சென்று வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அவரது தலைமையில் கூட்டணி ஆட்சியும் அமைந்தது. பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், ‘ ஏராளமான அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் வேண்டாம்.
இரண்டு வேலைக்காரர்கள் மட்டும் போதும். இரண்டு புல்லட் புரூப் கார்கள் இருந்தால் போதும். அமைச்சர்கள், அதிகாரிகள் விமான பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தில் பயணிக்க கூடாது’ உட்பட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
அவரது எளிமையை பல நாட்டினரும் பாராட்டினர். சில நாட்களிலேயே அவரது எளிமை செமத்தியாக பல்லிளித்து விட்டது. இதுகுறித்து பி.பி.சி., உருது சேனல் வெளியிட்டுள்ள செய்தி:
இம்ரான்கானின் வீடு, இஸ்லாமாபாத்தில் பானி காலா என்ற இடத்தில் உள்ளது. தலைமை செயலகத்தில் அவரது பிரதமர் அலுவலகம் உள்ளது. இரண்டுக்கும் இடையே தூரம் 15 கி.மீ., தான். ஆனால், வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.
இதை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையான விமர்சனம் செய்கின்றனர். பாக்., தகவல் துறை அமைச்சர் பாவாத் சவுத்ரி இது குறித்து கூறுகையில், ‘இம்ரான் கான் செயல்பாடு சரியானது தான். ஹெலிகாப்டரில் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய, ரூ.50 முதல் ரூ.55 வரை தான் செலவாகும்’ என்றார்.
ஆனால் உண்மையான செலவு மிக அதிகம். வீடு மற்றும் அலுவலகத்திற்கு இடையேயான தூரம் 15 கி.மீட்டர். விமான போக்குவரத்தை பொறுத்தவரை இதை 8 நாட்டிகல் மைல் என்று கூறுவர். ஹெலிகாப்டரில் ஒரு நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.16 ஆயிரம் செலவாகும். 8 நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.1.28 லட்சம் செலவாகும். அவர் காரில் அலுவலகத்திற்கு சென்றால் குறைந்த செலவு தான் ஆகும்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எம்புட்டு எளிமையானவர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி