இந்தியாவுக்கு எந்த சலுகையும் இல்லை…அமெரிக்கா தெரிவிப்பு

ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அமெரிக்காவின் கொள்கை காரணமாக, இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அந்நாட்டுக்கு சலுகை வழங்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்து. ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது எங்களுக்கு பெரிய கவலை தான். இந்தியாவுக்கு சலுகை வழங்கி பொருளாதார தடை விதிக்க மாட்டோம் எனக்கூற முடியாது. இதுகுறித்து அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு, உளவுத்துறை சார்ந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இருப்பினும், தேசிய நலன், இந்தியா – அமெரிக்கா நல்லுறவு ஆகியவற்றை பொறுத்து இதில் விதிவிலக்கு, சலுகை வழங்குவது குறித்து முடிவெடுக்க அதிபருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் பெண்டகனிலிருந்து இந்த எதிர்மறையான பதில் வந்துள்ளது.

பின்னணி:

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது இருநாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்த வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த (2+2 பேச்சுவார்த்தை) அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் அமைச்சர்களின் பேச்சுவார்த்தை பலமுறை பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.

இறுதியாக கடந்த 6ம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அவசரமாக வடகொரிய பயணம் மேற்கொண்டதால், மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடையும் விதித்தது. அத்துடன் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்று இந்தியா உட்பட நட்பு நாடுகளை வலியுறுத்தியது. இந்த விவகாரம் தான் பேச்சுவார்த்தை ரத்தானதுக்கு காரணம் என்று பேசபட்டது.

இடையே ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ரஷ்யா – அமெரிக்கா இடையே உறவு மோசமாக உள்ள நிலையில், இந்தியாவின் நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய – அமெரிக்க அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வரும் வாரம் (செப்டம்பர் 6ம் தேதி) நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.

Sharing is caring!