இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் பல பகுதிகளை சுனாமி தாக்கியது. குறிப்பாக சுலாவேசி தீவு சுனாமி பேரலையில் சிக்கி சின்னாபின்னமாகியது. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் தீவின் கட்டமைப்பையே சீரழித்தன. பலு மற்றும் டோங்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

பலு கடலோர பகுதியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 821 சடலங்களும், டோங்லாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்தது.

இதில் உயிரிழந்தவர்களின் 61 பேர் வெளிநாட்டவராவார். இந்நிலையில் இந்தோனேசிய காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுவரை 1,203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே நிலநடுக்கத்தின் மையப்புள்ளியும், மீன்பிடி நகரமுமான டோங்லாவில் இடிபாடுகள் அதிகமாக இருப்பதாலும், தொலைத்தொடர்பு மற்றும் மின்னிணைப்பு இல்லாததாலும் மீட்புப்பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாக இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்புப்பணி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!