இந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

இந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், வடக்கு பகுதியில் உள்ள, சுலவேசி தீவின், டோங்காலா நகரில், நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவானது.இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள, பலு நகரில், 7.5 ரிக்டர் அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நகரங்களிலும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன; மின் இணைப்பு, தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பலு நகரில் வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு, அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.இதையடுத்து, உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது; பின், திரும்ப பெறப்பட்டது.

ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில், கடலோரப் பகுதிகளில், சுனாமி தாக்கியது. 2 மீ., உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள், கரையை நோக்கி சீறிப் பாய்ந்தன.இதில், கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதம் அடைந்தன. சுனாமியால், பலு நகர் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, தேசிய பேரிடர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்; சுனாமி பேரலைகளில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், காயம் அடைந்தோருக்கு, மருத்துவமனை வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.இதற்கிடையே, சுனாமி பேரலைகள் தாக்கும் காட்சிகள், ‘வீடியோ’ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதில், ராட்சத அலைகள் எழும்பி, கடல் பகுதியை மூழ்கச் செய்வதும், கட்டடங்கள் அலையில் மூழ்குவதும் இடம் பெற்றுள்ளன.கடலோரத்தில் உள்ள மசூதியை மூழ்கச் செய்யும் அளவுக்கு, சுனாமி அலைகள் எழும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.சுனாமி அலைகளில், பலர் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.சமீபத்தில், இந்தோனேஷியாவின், லம்பாக் தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஜப்பானில் சூறாவளி17 பேர் காயம்கிழக்காசிய நாடான, ஜப்பானின் ஒகினாவாவில், நேற்று சூறாவளி காற்று வீசியது. இதில், 17 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சூறாவளியால், பல பகுதிகளில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.இதனால், சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, ‘இந்த சூறாவளி, மேலும் தீவிரமடையும்’ என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஒகினாவாவில், ஆபத்தான பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால், மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!