இனி ஒருபோது நிதி கிடையாது பாகிஸ்தானுக்கு… டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு

வாஷிங்டன்:
ஒரு போதும் நிதி அளிக்க முடியாது…. முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

”பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு, இனி ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில், மறைந்து வாழும் பயங்கரவாதிகளையும், சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி, ஒழிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் தீவிரம் காட்டவில்லை.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவும், அவற்றை ஒழித்துக் கட்ட, எங்களுக்கு உதவும்படியும், அந்நாட்டு அரசிடம் கூறியிருந்தோம்.

இந்த விஷயத்தில், எங்களுக்கு பாகிஸ்தான் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ நிதி உதவியாக அளிக்கப்படும் 9,360 கோடி ரூபாயை வழங்க முடியாது.
பாகிஸ்தானின் அபோட்டாபாதில், பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் வசித்தது அந்த நாட்டுக்கு தெரிந்தும் கூட, எங்களுக்கு தகவல் அளிக்கவில்லை.

ஆனால், எங்களிடம் இருந்து கோடிக் கணக்கான உதவிகளை மட்டும் பெற்றனர். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டாமல், ஆதரவு தெரிவிக்கும் பாகிஸ்தானுக்கு, இனி ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!