இனி ரயில்களிலும் ஷாப்பிங்… பயணிகளே இனி ஜாலிதான்!!!
மும்பை:
இனி நீங்கள் ரயிலிலும் ஷாப்பிங் செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்படி தெரியுங்களா?
ஓடும் ரயிலில், பயணியர், ‘ஷாப்பிங்’ செய்யும் வசதி, புத்தாண்டில் துவங்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் பயணத்தில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக, ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் திட்டத்தை, மேற்கு ரயில்வே செயல்படுத்தவுள்ளது.
இதையடுத்து, மேற்கு ரயில்வே மண்டலத்தின், 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில், ‘ஷாப்பிங்’ வசதி துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரயிலில், சீருடை அணிந்த இரண்டு விற்பனையாளர்கள், பொருட்கள் அடங்கிய, ‘டிராலி’யுடன் வருவர். அவர்களிடம் இருந்து பயணிகள் தங்களுக்கு தேவையான, அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகளை வாங்கலாம்.
உணவுப் பொருள், சிகரெட், புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதியில்லை. பயணிகளுக்கு பொருட்களின் பட்டியல் வழங்கப்படுவதால், தங்களுக்கு தேவையானவற்றை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும்.
முதல்கட்டமாக, வரும் ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இயக்கப்படும் இரண்டு ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற ரயில்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதனால், ரயில்வேயின் வருமானம் அதிகரிக்கும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி