இரண்டு மேயர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரு தினங்களில் இரண்டு மேயர்கள் வேறு வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தனவான் நகரின் மேயர் அண்டானியோ ஹலிலி ஆவார். இவர் தனது ஊழியர்களுடன் ஒரு கொடியேற்றும் விழாவில் நேற்று முன் தினம் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ஹலிலி அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். ஹலிலியின் பாதுகாவலர்கள் அந்த துப்பாக்கி சூடு நடத்தியவரை பதிலுக்கு சுட்டதில் அவர் மரணம் அடைந்தார். அவர் யாரென்பது இன்னும் தெரியவில்லை. ஹலிலிக்கும் போதை மருந்து கும்பலுக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதனால் அந்த கும்பலை சேர்ந்த யாராவது இவரை சுட்டிருக்கலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.நேற்று டினியோ நகர மேயரான ஃபெர்டினாண்ட் போட் என்பவர் அரசு அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டுக்கு சென்றுக் கொண்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் திடீரென ஃபெர்டினாண்டை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். மேயர் அங்கேயே மரணம் அடைந்துள்ளார். கொலையாளி தப்பி ஓடி விட்டார்.

இந்த இரு தொடர் கொலைகளும் பிலிப்பைன்ஸ் அரசியலில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இரு மேயர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அந்நாட்டு அதிபருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!