இரு பெண்களுக்கு பிரம்படி தண்டனை

ஒருபால் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் இஸ்லாமிய நீதிமன்றம் ஒன்று இரு பெண்களுக்கு நேற்று பிரம்படி தண்டனை வழங்கியுள்ளது. இதனை அவமானகரமான மற்றும் இழிவான தண்டனை என்று செயற்பாட்டாளர்கள் சாடியுள்ளனர்.

வடக்கு டெரென்கனு மாநிலத்தில் பொதுச் சதுக்கம் ஒன்றில் கார் வண்டிக்குள் இருந்து 22 மற்றும் 32 வயது கொண்ட இரு பெண்கள் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டனர். இது நாட்டின் அதிக பழமைவாத சிந்தனை கொண்ட பகுதியாகும்.

இந்த இரு பெண்களின் அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில் இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக குற்றங்காணப்பட்டு ஆறு பிரம்படி தண்டனை மற்றும் 3,300 ரின்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை ஆடை அணிந்து கதிரையில் அமரவைக்கப்பட்ட இந்த பெண்கள் மீது பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு அதில் ஒருவர் அழுதபடி காணப்பட்டார். இவ்வாறு பெண்கள் மீது பிரம்படி தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை என்று செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசியாவில் இரட்டை சட்ட அமைப்பு கடைப்பிக்கப்படுவதோடு இஸ்லாமிய நீதிமன்றம் முஸ்லிம் பிரஜைகளுக்கான மத மற்றும் குடும்ப விடயங்களை கையாள்கிறது. ஒழுக்க விடயங்கள் குறித்தும் இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது

Sharing is caring!