இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவரது வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது என டெய்லி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசையில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பேட்டில், முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் திருப்பப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அப்படியெனில் பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த குறிப்பேட்டில் உள்ள அந்த கையெழுத்துக்கு சொந்தமானவர் யார் என்பதை கண்டறிவதில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரமப்பித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பிரகாரம், கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரன் அர்சலன் கவாஜா பெற்றோருடன் தங்கியிருந்த Westmead வீட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடந்த வாரம் தேடுதல் நடத்தப்பட்டது.

இருப்பினும் இந்த தேடுதலின்போது அர்சலன் கவாஜா கைது செய்யப்படவோ அல்லது எவ்வித குற்றச்சாட்டுகளோ பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரனான அர்சலன் கவாஜா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!