இல்லை… அடிப்படை முகாந்திரம் இல்லை… அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன்:
அடிப்படை முகாந்திரம் இல்லை… இல்லை… என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அமெரிக்க விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன.

மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், இதுவரை நடத்திய ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழக தலைவர் டேனியல் எல்வெல் கூறியுள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இருந்தும் இதுவரை தகவல் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!