உனக்கு 58, எனக்கு 9… கணவன், மனைவி பதிவு செய்த 67 வழக்குகள்

கணவன், மனைவி ஒருவர் மீது ஒருவர் 67 வழக்குகள் பதிவு செய்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எரிச்சலடைந்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஒருவர் மீது ஒருவர் அடுத்தடுத்து 67 வழக்குகளை பதிவு செய்தனர். இதை கண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எரிச்சலைடைந்துள்ளனர். அவர்களின் விவகாரத்து வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த தம்பதிக்கு 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர்; மனைவி எம்.பி.ஏ., முடித்துள்ளார். இருவரும் அமெரிக்கா சென்றனர். 2009ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்; மனைவி கிரீன் கார்டு பெற்றுள்ளார்.

கருத்து வேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் மனைவி பெங்களூரு திரும்பினார். சில மாதங்களில் கணவரும் பெங்களூரு வந்தார். பின்னர் அவர் தன் மனைவி மீது 58 வழக்குகள் பதிவு செய்தார். விட்டேனா பார் என்று கணவர் மீது மனைவி 9 வழக்குகள் பதிவு செய்தார்.

ஒரு ஆண்டாக இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் சுப்ரீம் கோர்ட் ஈடுபட்டது. ஆனால் தொடர்ந்து இருவரும் வழக்குகள் பதிவு செய்ய நீதிபதிகள் எரிச்சலைடைந்தனர். குறிப்பாக, குழந்தையை யார் பொறுப்பில் விடுவது என்பதில் தான் சிக்கல் நீடித்தது.

குழந்தை படிக்கும் பள்ளிக்கும் கணவரும், மனைவியும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் சஞ்சய் சிங் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

விவகாரத்து பிரச்னையை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். குழந்தை படிக்கும் பள்ளிக்கு கணவர், மனைவி செல்லக் கூடாது. குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பள்ளி நிர்வாகமே இருவருக்கும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Sharing is caring!