உலகின் அழகிய சிறுமி

ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக அங்கீகரிக்கப்பட்டு அசத்தி இருக்கிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த சிறுமி ஜாரே.

5 வயதான ஜாரேயின் தோற்றம் வசீகரமானது. கவிதை பாடும் கண்கள், மென்மையான சருமம், கவர்ந்திழுக்கும் கூந்தல் என அழகான அத்தனை அம்சங்களும் அந்த சிறுமியிடம் உள்ளன.

ஜாரேவைப் பார்த்த மொபே பாமுயிவா என்ற புகைப்படக்கலைஞர், பரவசப்பட்டு படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார். அவற்றை “ஓ… இவள் மனிதப்பிறவிதான்… ஆனாலும் இவள் ஒரு தேவதை” என்று தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதில் அவர், “இவளை புன்னகைக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். இவளை சத்தமிட்டு சிரிக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். ஆனால், இவளை இவளது இயல்பான நிலையில் நமது கண்களின் வழியாக பார்க்க வைத்திருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

ஜாரேயின் படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் ‘இவள் அன்றோ உலகின் அழகிய சிறுமி’ என்று பரவசமடைந்துள்ளனர்.

இந்த சிறுமிக்கு ஜோமி என்று 7 வயதிலும், ஜோபா என்று 10 வயதிலும் இரண்டு மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள்.

Sharing is caring!