உ.பி.,யில் கல்வீச்சு சம்பவம்… ஒரு போலீஸ்காரர் பலி… பெரும் பரபரப்பு

லக்னோ:
உ.பி.யில் நடந்த போராட்டத்தின் போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் ஒரு போலீசார் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்குள்ள காஜிபுரில் நடந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர்.

அவர்கள் காஜிபுர் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் சென்றதும் காஜிபுர் அருகே இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த, போலீசார் முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் படுகாயம்அடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சுரேஷ் வத்ஸ் (48) மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த போலீஸ்காரர் சுரேஷ் வத்ஸ் மனைவிக்கு 40 லட்சம் ரூபாயும், பெற்றோருக்கு, 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமீபத்தில், புலந்ஷர் நகரில் பசுக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக நடந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், சுட்டுக் கொல்லப்பட்டார். இப்போது போலீஸ்காரர் சுரேஷ் வத்ஸ் கல்வீச்சில் பலியாகி உள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!