ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி அபாயகரமானவர் – சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான்

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி அபாயகரமானவர் என சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அவர் இதனைத் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

வௌ்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் மருமகனுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனுடனும் சவுதி இளவரசர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஜமால் கஷோஜி மத ஒழுங்கமைப்பொன்றின் உறுப்பினர் என்பதுடன், மிகவும் அபாயகரமானவர் என சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோஜி கடந்த மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்திற்கு சென்று காணாமற்போனதன் பின்னர் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் ஊடகவியலாளரின் கொலையுடன் சவுதி அரச குடும்பத்திற்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்திருந்ததுடன், ஜமால் கஷோஜி காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

கஷோஜி கொலை செய்யப்பட்டுள்ளதை சவுதி அரசு உறுதிப்படுத்தியதன் பின்னர், இந்தக் கொலை அனைத்து சவுதி மக்களுக்கும் வலிதரும் சம்பவம் என வருத்தம் தெரிவித்திருந்ததுடன், கொலைக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் எனவும் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, அறிக்கை வௌியிட்டுள்ள சர்வதேச ஊடகம், சவுதி இளவரசர் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வௌியிடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

Sharing is caring!