ஊழியர் ஒருவரை வெள்ளைப்புலி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி

ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை வெள்ளைப்புலி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் ககோஷிமா நகரில் ஹிரகவா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் மிகவும் அபூர்வமான 4 வெள்ளைப் புலிகள் உள்ளன. இந்தப் புலிகளில் ஒன்று, தன்னைப் பார்த்து பராமரித்து வந்த ஊழியரையே கழுத்தில் கடித்துக் குதறி கொன்று விட்டது.

ஊழியரின் அலறலைத் தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மற்ற ஊழியர்கள் அவரை ரத்த வெள்ளத்தில் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வெள்ளைப்புலிக்கு மயக்க மருந்து கொடுத்து, மயங்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஊழியரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் 40 வயதானவர் என்று மட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் பணியாளர் ஒருவரை புலி ஒன்று கடித்துக்கொன்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!