“எதிர்ப்புகள் எத்தனை வந்தால் என்ன? சபரிமலை செல்வேன்… செல்வேன்”

கொச்சி:
எந்த எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு செல்வேன் என்று விரதம் இருந்து மாலை அணிந்து ஆசிரியை தெரிவித்துள்ளார்.

‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்வதற்காக, மாலையணிந்து விரதம் மேற்கொண்டுள்ள, கண்ணுாரைச் சேர்ந்த ஆசிரியை, ரேஷ்மா, ”எந்த எதிர்ப்பு வந்தாலும் சபரிமலை செல்வேன்,” என, கூறியுள்ளார்.

கேரள மாநிலம், கண்ணுாரைச் சேர்ந்த, ஆசிரியை, ரேஷ்மா நிஷாந்த், 32, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில், வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது;

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக, மாலையணிந்து, 41 நாட்கள் விரதத்தை துவக்கியுள்ளேன். எந்த தடை ஏற்பட்டாலும், சபரிமலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். புரட்சி செய்வதற்காகவோ அல்லது விளம்பரம் தேடுவதற்காகவோ, இதைச் செய்யவில்லை;

எதிலும் ஒரு துவக்கம் தேவை. இன்று நாம் செய்தால், அது எதிர்காலத்தில் பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே, சபரிமலைக்கு செல்வது குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்தேன். ஆனால், என் பதிவுக்கு, பலர் மிரட்டலாக, ஆபாசமாக பதில் பதிவு செய்துள்ளனர். பல அமைப்பைச் சேர்ந்தவர்கள், என் வீட்டு முன் குவிந்து மிரட்டும் வகையில் கோஷமிடுகின்றனர்.

பல்வேறு தரப்பில் இருந்தும், ‘சபரிமலைக்கு செல்லக் கூடாது’ என, எச்சரிக்கை வருகிறது. இருந்தாலும், சபரிமலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன்; 18 படிகளில் ஏறிச் செல்வேன். நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது போன்றது தான், மாதவிடாய் காலமும். அதனால், எவ்வித மன உறுத்தலும் இல்லாமல், 41 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்ல உள்ளேன்.

என் கணவரும் எனது 5 வயது மகளும் என்னுடன் சபரிமலைக்கு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!