ஏமாற்ற உட்கார்ந்து யோசிப்பார்களோ… புதையல் எடுப்பதாக கூறி மோசடி

தொட்டியம்:
விதவிதமாக ஏமாற்றுகிறார்கள்… நம் மக்களும் ஏமாந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இப்படியும் ஒரு மோசடி நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் இந்திராநகரை சேர்ந்தவர் மனோகரன் (37). விவசாயி. இவரது வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் நள்ளிரவில் வந்த மந்திரவாதி ஒருவர், மனோகரனிடம் உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது. அதனால் உங்கள் மகன் உயிருக்கே ஆபத்து என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு பரிகாரம் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? நீங்கள் வைத்திருக்கும் செல்போன் மூலம் கெட்ட சக்தி ஏவி விடப்பட்டு இருக்கிறது. அதை புற்றில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறி அந்த செல்போனை வாங்கி சென்றார். (அடப்பாவிங்களா? இதைகூட நம்பி இருக்காங்களே.)

பிறகு மீண்டும் மனோகரனை சந்தித்த அந்த மந்திரவாதி உங்கள் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் இருக்கிறது. அதை எடுக்க சில பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி பல முறை பணம் வாங்கியுள்ளார்.

மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பெற்ற மந்திரவாதி பூமி பூஜை போட வேண்டும் எனக்கூறி ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு பிறகுதான் சந்தேகம் எழுந்துள்ளது மனோகரனுக்கு. இது பற்றி தனது உறவினர்களிடம் கூறிய மனோகரன் உறவினர்கள் உதவியுடன் அந்த மந்திரவாதியை பிடிக்க வேண்டும் என ரூ.5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு பூஜை செய்ய வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தார்.

அதன் பேரில் இரவு வருவதாக கூறிய மந்திரவாதி நேற்று அதிகாலை மனோகரன் வீட்டிற்கு தனது கூட்டாளிகள் 3 பேருடன் காரில் வந்து இறங்கினார். அப்போது அங்கு தயாராக இருந்த மனோகரனின் உறவினர்கள் 4 பேரையும் பிடித்து தொட்டியம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் மாவட்டம் கொளத்தூர் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த கோபால் (45), அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (24), மோகன்ராஜ்(23), சக்திவேல்(25) என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!