ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி பதவியை இராஜினாமா

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2 வருட பணிக் காலத்தின் பின்னர் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஓவல் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹேலி வியக்கத்தக்க பணியை ஆற்றியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

46 வயதான நிக்கி ஹேலி, தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராக இருந்துள்ளார்.

ட்ரம்ப் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில பெண்களில் ஒருவரான இவர், தனது இராஜினாமாவிற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

ஆனால், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் என்ற யூகங்களை மறுத்துள்ளார்.

இதனையடுத்து, நிக்கி ஹேலிக்குப் பதிலாக வேறொருவரின் பெயரை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹேலிக்குப் பதிலாக தனது முன்னாள் பாதுகாப்புச் சபை ஆலோசகரான டினா போவெல்லை (Dina Powell) நியமிப்பது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அதேசமயம், தனது மகள் இவங்கா ட்ரம்ப், வலு சேர்க்கும் விதமாக இருப்பார் எனவும் ஆனால், தன் மகள் என்பதால் அவருக்கு வாய்ப்பளித்தாக பிறர் குற்றம் சுமத்தலாம் எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தின் பின்னர், தான் இந்த விளையாட்டில் இல்லை என இவங்கா ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Sharing is caring!