ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர வேண்டும்

‘ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர வேண்டும்’ என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு கடந்த வாரம் சுற்றுப் பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசினார்.

அதன்பின் பேட்டியளித்த டிரம்ப், ‘‘தெரசா மேவின் அணுகுமுறை, அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக வாய்ப்புகளை அழிப்பதுபோல் உள்ளது. பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையை எப்படி நடத்த வேண்டும் என அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன்.

ஆனால், அவர் அதை கேட்கவில்லை. தெரசா மே வியக்கத்தக்க பெண். அவர் பிரதமர் பணியை சிறப்பாக செய்கிறார். இங்கிலாந்து உடனான உறவை அமெரிக்கா மிகவும் சிறப்பாக கருதுகிறது. எந்தவித தடையும் இல்லாமல் இங்கிலாந்துடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா விரும்புகிறது’’ என கூறினார்.

டிரம்ப் தெரிவித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தெரசா மே அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்தன. இது, இங்கிலாந்தில் தெரசா மே எதிர்ப்பாளர்கள் உட்பட பலருக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில், டிரம்ப் கூறிய ஆலோசனை பற்றி தெரசா மேவிடம் பிபிசி டிவி நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தெரசா மே, ‘‘பிரக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் மீது நான் வழக்கு தொடர வேண்டும். பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என டிரம்ப் கூறினார்’’ என்றார்.

Sharing is caring!