ஒபெக்கிலிருந்து (OPEC) விலக கத்தார் முடிவு

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கிலிருந்து (OPEC) விலக கத்தார் முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஆதிக்கம் நிறைந்த அந்த கூட்டமைப்பில், சக உறுப்பு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முடிவை அந்நாடு எடுத்துள்ளது.

எனினும், எரிவாயு உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருப்பதால், ஒபெக்கிலிருந்து விலகுவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் சாட் அல்-காபி செய்தியாளர்களிடம்,

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் OPEC கூட்டமைப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அந்த அமைப்பிடம் தெரிவித்துவிட்டோம். OPEC அமைப்பிலிருந்து விலகினாலும், எண்ணெய் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இருந்தாலும், எரிசக்தித் துறையில் இயற்கை எரிவாயுவுக்கே நல்ல எதிர்காலம் இருப்பதால், அதன் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருக்கிறோம். அதற்கு வசதியாகவே, OPEC அமைப்பிலிருந்து விலகுகிறோம்

என கூறியுள்ளார்.

உலக அளவில், எரிவாயு ஏற்றுமதியில் கத்தார் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியல் விவகாரங்களில் சவுதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சவுதி அரேபிய ஆதிக்கம் நிறைந்த OPEC கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் கத்தாருக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில், அந்த அமைப்பிலிருந்து விலக கத்தார் முடிவு செய்துள்ளது.

Sharing is caring!