“ஒரு முறைதான்… மாதம் ஒரு முறைதான் விஐபிகள் தரிசனம் செய்ய அனுமதி”
திருப்பதி:
ஒரு முறைதான்… மாதம் ஒரு முறைதான் விஐபிகள் தரிசனம் செய்ய அனுமதி என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக, தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில் உள்ள, ஏழுமலையான் கோவிலுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு, அதிகாலை முதல், காலை, 10:00 மணிவரை, மூன்று விதங்களில் தேவஸ்தானம், ‘பிரேக்’ தரிசனம் வழங்கி வருகிறது.
இந்த தரிசனம், நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. இவற்றை கவனிக்க அவர்களுக்கென தனித்தனியாக மக்கள் தொடர்பு செயலர்கள் உள்ளனர். மேலும் வி.ஐ.பி.,க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக, பரிந்துரை கடிதங்களும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் பரிந்துரை கடிதங்கள் வழங்குவது, தற்போது அதிகரித்துள்ளதால் சாதாரண பக்தர்களுக்கு காலையில், 10:00 மணிக்கு மேல் மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அவர்களுக்கு, விரைவில் தரிசனம் வழங்க, தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து திருமலைக்கு வரும் வி.ஐ.பி.,க்களுக்கு, தேவஸ்தானம் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு செய்வதால், வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை குறைவதுடன், சாதாரண பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது. ஆனால், இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி