ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன.

சீனாவில், ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன.

அந்நாட்டில் லியோனிங், ஹெனான், ஜியாங்சூ, ஜேஜியாங், அன்ஹு ஆகிய 5 மாகாணங்களில் கடந்த வாரம் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. பன்றிகள் மூலம் பிற விலங்குகளுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றி இறைச்சியைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இந்த 5 மாகாணங்களிலிருந்து பிற மாகாணங்களுக்கு பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சிக் கடைகளை அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவன உணவு வேளாண் அமைப்பு, மற்ற ஆசிய நாடுகளுக்கும் அது பரவக்கூடும் என்று சென்ற வாரம் எச்சரித்திருந்தது. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் மனிதர்களுக்கு ஆபத்தில்லை. இருப்பினும், அதனால் பாதிக்கப்பட்ட பன்றிகள் சில நாட்களில் மாண்டுவிடும். அந்தக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தோ, குணப்படுத்தும் மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Sharing is caring!