ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா அரசு வாங்குகிறது கடன்

திருவனந்தபுரம்:
ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா அரசு கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநில அரசு, இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவின் கடன் நிலைமை சரியில்லை என கடந்த ஆண்டே நிதி ஆயோக் அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் குறைவாக கடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், கேரளாவில், கடன் சுமை 32 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரள சட்டசபையில், மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ 14வது நிதி கமிஷன், ஒரு மாநிலத்தின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால், கேரளாவின் நிதி பற்றாக்குறை, 4 சதவீதமாக உள்ளது. மாநிலத்தின் வருவாயில் 16 சதவீதம் வட்டி செலுத்தவும், 20 சதவீதம் பென்ஷன் வழங்கவும் செலவிடப்படுகிறது’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடுமையான நிதி பற்றாக்குறை இருப்பதால், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்கவும், ஓணம் பண்டிகை கொண்டாடவும், 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மேற்பார்வையின் கீழ், பத்திரங்களை வெளியிட்டு, இந்த தொகை திரட்டப்படும். 10 ஆண்டுகளுக்குள் இந்த தொகை திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!