கடவுள் தேசம் மீண்டும் ராஜநடை போடும்…கேரளா பற்றி நடிகர் நிவின் பாலி

கடவுளின் தேசம் தற்போது தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்றும் இதில் இருந்து கேரளா விரைவில் மீண்டு வந்து ராஜ நடை போடும் என்றும் நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து உதவ பலர் முன் வந்துள்ளனர். திரையுலகினர் பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரள சினிமா நட்சத்திரங்கள் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேராளவில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் குறித்து நடிகர் நிவின் பாலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “கடவுளின் தேசத்தில் பிறந்ததை நினைத்து எப்போதும் பெருமை படுகிறேன். தற்போது இந்ததேசம் தத்தளித்து கொண்டு இருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடைமையை இழந்து, வீடின்றி, உணவின்றி, அடிப்படை வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

இது ன் மனதை பிசைகிறது. இந்த தேசத்தின் ஒற்றுமை மட்டுமே இந்த நேரத்தில் நம்பிக்கை கீற்றாய் இருக்கிறது. நம் நாட்டு மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த வீழ்ச்சியில் இருந்து கேரளா மாநிலம் விரைவில் மீண்டு வந்து ராஜ நடை போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை என் மாநிலத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது கேரளாவிற்கு உடனடியாக தேவைகள் அவசியம். உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை உடனடியாகக் கேரளாவுக்கு அனுப்புங்கள். நீங்கள் யார் மூலமாக அனுப்புகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உடனடியாக வந்துசேர வேண்டும் என்பதுதான் நோக்கம். ‘கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும்’ என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன்கைகூப்பி வேண்டுகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!