கத்தார் முதன் முறையாக குறிப்பிட்ட அளவிலான நிரந்த குடியுரிமை வழங்க முடிவு

வளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாத நிலையில் கத்தார் முதன் முறையாக குறிப்பிட்ட அளவிலான நிரந்த குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்துக் கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு வருடமும் நூறு நபர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கத்தார் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் 4ம் தேதி நிரந்தரக் குடியுரிமை பெறப்போகும் முதல் நூறு நபர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பகிரின் மற்றும் எகிப்த் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வெளிநாட்டவர்களைக் கூடுதல் நாட்கள் தங்க அனுமதி அளித்தாலும் இது வரை நிரந்தரக் குடியுரிமையினை அளிக்காத நிலையில் கத்தரின் இந்த முடிவு வளைகுடா நாடுகள் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டவர்களுக்குக் கத்தாரில் குழந்தை பிறந்தால் அவர்கள் 10 வருடம் அங்கு இருந்தால் நிரந்தரக் குடியுரிமை பெறலாம். அல்லது வெளிநாட்டவர்கள் 20 வருடங்களுக்கு அங்குப் பணி நிமித்தமாக, வணிகம் நிமித்தமாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை வேண்டும் என்றால் அரபிக் மொழியில் தங்கு தடையின்றி எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்து இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.

கத்தார் பெண்ணை வெளிநாட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படும். அது மட்டும் தனித்திறன் படைத்தவர்களுக்குக் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை பெற சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிரந்தரக் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள் உள்ளூர் கூட்டாளிகள் இல்லாமல் சொந்தமாக வணிகம் செய்ய முடியும் என்பதுபோல பல சலுகைகள் உண்டு.

Sharing is caring!