கபடத்தனமான அரசியல் சூழ்ச்சியில் அகப்படாதிருங்கள்….???

சில பகுதிகளில் நேற்றிரவு அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த சம்பவங்களை உன்னிப்பாக அவதானிக்கையில், மறைமுக அரசியல் சக்திகளால் வழிநடத்தப்படுகின்ற கும்பல்கள் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளமை தௌிவாகின்றது.

இந்த மிலேச்சத்தனமான நாசக்கார செயல்களுடன் தொடர்புடையவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமையும் இரகசியமல்ல.

நாட்டை சின்னாபின்னமாக்கிய 83 கறுப்பு ஜூலை இன்னும் பலரது மனங்களில் கசப்பான நினைவுகளாய்ப் பதிந்துள்ளது.

அப்போதிருந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் தேவைக்காகவே அந்த கலவரம் உருவாக்கப்பட்டது.

இதன் விளைவுகள் என்ன?

அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொண்ட மூன்று தசாப்த யுத்தத்தின் பிடியில் எமது தாய்நாடு சிக்கித் தவித்தது.

இந்த யுத்தம் இன்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை எழுப்பி எம்மை சர்வதேசத்தின் முன் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.

அன்று நாம் தவறவிட்ட தீர்மானங்களை இன்று எடுப்பதற்கான தருணம் இதுவல்லவா?

கபடத்தனமான அரசியல் சூழ்ச்சிகளில் அகப்படாதிருக்க வேண்டியது தேசத்தின் பொறுப்பாகும்.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய ஒரு சிலரை காரணம் காட்டி ஒரு சமூகத்திற்கே பயங்கரவாத முத்திரை குத்துவதை ஒருபோதும் செய்யக்கூடாது.

பயங்கரவாதிகளின் செயற்பாட்டிற்கு பதிலளிப்பதற்கு அப்பாவி மனிதர்களின் உயிர்கள், உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பதையும் சொத்துக்களை சூறையாடுவதையும் ஒழுக்கமுள்ள சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

ஒரு அரசியல் கட்சி அல்லது பல அரசியல் கட்சிகளில் உயர் பதவிகளை வகிப்போரின் அனுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் அல்லவா?

அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்கு துணைபோக வேண்டாம்.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு சந்தர்ப்பம் வரும் வரை கழுகுப் பார்வையுடன் இருக்கும் வௌிநாட்டு சக்திகளுக்கு நாம் ஒருபோதும் வாய்ப்பளிக்கக்கூடாது.

இலங்கையர்களான நாம் ஒரே இனத்தவராவோம். நாம் ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்கள். எமது நாடு என நாம் பெருமிதம் கொள்வதற்கு எமக்கு ஒரே ஒரு நாடு மாத்திரமே உள்ளது.

இலங்கை என்பதே எமது நாடு!

Sharing is caring!