கம்போடியாவில் இன்று 6வது பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு

கம்போடியாவில் இன்று 6வது பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

கம்போடியாவில் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடிகள் கொடுத்து வந்த எதிர்க்கட்சியான கம்போடிய தேசிய மீட்புக் கட்சியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைத்த நிலையில் இன்று பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..

ஆளுங்கட்சியான கம்போடிய மக்கள் கட்சியை எதிர்த்து 19 கட்சிகள் களமிறங்கி உள்ளன. இருந்தாலும் ஆளும்கட்சியே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு, தற்போதைய பிரதமர் ஹுன் சென்னின் ஆட்சியை கலைக்க அமெரிக்காவுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கில், கம்போடிய முக்கிய எதிர்க்கட்சியாகக் கருதப்பட்ட கம்போடிய தேசிய மீட்புக் கட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நிரூபணம் செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த கட்சியை கலைத்து கம்போடியா உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் வலிவற்று காணப்படுவதால், தற்போதைய பிரதமர் ஹுன் சென்னின் (Hun Sen) கம்போடிய மக்கள் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!