கருணாநிதி மறைவு… தஞ்சையில் பல்வேறு கட்சினர் மவுன ஊர்வலம்

தஞ்சாவூர்:
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு கட்சியினர் சார்பில் தஞ்சையில் மவுன ஊர்வலம் நடந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே கருணாநிதி படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகே இருந்து ஊர்வலம் தொடங்கியது.

இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும், வர்த்தக பிரிவு தலைவருமான உபயதுல்லா, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், வக்கீல் தஞ்சை ராமமூர்த்தி, தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி காந்திஜிசாலை, இர்வின் பாலம் வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் வணிகர் சங்க பேரவை சார்பில் தஞ்சையில் கருணாநிதியின் உருப்படத்திற்கு நகர தலைவர் வாசுதேவன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அவைத்தலைவர் ஜெயபால், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, ரவி, நிர்வாகிகள் நசீர், ஆத்மநாபன், நகர செயலாளர் ராஜா, பொருளாளர் கந்தமுருகன், ஆலோசகர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கறி வர்த்தக சங்கம் சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தலைவர் தர்மராஜ் தலைமையில் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் வியாபாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் வடிவேல், அய்யாத்துரை, ஜெயக்குமார், அன்வர், நடராஜன், எஸ்.கே.சிதம்பரம் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!