கல்கியின் தியாக பூமி ஏற்படுத்தி புரட்சி

எழுத்தாளர், நாவலாசிரியர் கல்கியின் நினைவுநாள் இன்று. சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய பொன்னியின் செல்வன், இன்றைக்கும் வாசிக்கப்படுகிற நாவல். அதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் முதல் மணிரத்னம் வரை பலரும் முயற்சித்தார்கள். கல்கியின் எழுத்து உருவாக்கிய பிரமாண்டத்தை திரையில் கொண்டு வர முடியுமா என்று அந்த முயற்சியை கைவிட்டார்கள்.

கல்கி சினிமாவுக்கென்று எழுதிய கதை தியாக பூமி. அதனை கே.சுப்பிரமணியம் இயக்கினார். இந்தப் படத்தின் புதுமை என்னவென்றால் படம் தயாராகிக் கொண்டிருக்கும்போது அதன் திரைக்கதையை ஆனந்த விகடனில் எழுதி வெளியிட்டார் கல்கி. ஒவ்வொரு வாரமும் படத்தின் ஸ்டில்சோடு கதை வெளிவரும். அதன்பிறகு முழு படமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

தியாகபூமி பக்கா மசாலா கதை. அன்றைய ஹாட் டாபிக் ஆன சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புதான் கதை களம். அதில் பெண்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தன்னை விரும்பாத, வெறுத்த கணவன் முன் வாழ்ந்து காட்டுகிற ஒரு பெண்ணின் கதை. அப்போது விவாகரத்து சட்டம் இல்லாததால் அவள் கணவனை விவாகரத்து செய்யாமல் அவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது மாதிரியான புரட்சிக் கதை.

பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரியாகவும், எஸ்.டி.சுப்புலட்சுமி சாவித்ரியாகவும் நடித்தனர். தியாகபூமி திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்படும் என்று தெரிந்ததும் கெயிட்டி தியேட்டரில் இலவசமாக படத்தைக் காட்டினார், தடை உத்தரவு வந்து தியேட்டரிலேயே லத்தி சார்ஜ் நடந்தது என்பார்கள். படத்தை பற்றிய விமர்சனங்கள், விவாதங்களை தனி புத்தகமாக வெளியிட்டார்கள். இந்தப் படத்தின் நெகட்டிவ் புனே திரைப்படக் கல்லூரிய மியூசியத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Sharing is caring!