“காங்., கலாசாரத்திலிருந்து வெளியேற மிசோரம் மக்களுக்கு வாய்ப்பு”
லுங்லெய்:
காங்கிரசின் கலாசாரத்திலிருந்து வெளியேற மிசோரம் மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மிசோரமின் லுங்லெய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த பகுதிக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கு 27 முறை பயணம் செய்துள்ளேன். வட மாநிலத்தவர் அணியும் உடையை வெளிநாட்டை சேர்ந்தது எனக்கூறி அவமானப்படுத்திய காங்கிரசின் செயலை கண்டு, கோபமும், வருத்தமும் ஏற்பட்டது.
உங்களின் நம்பிக்கையும், லட்சியமும் பற்றி காங்கிரசுக்கு கவலையில்லை. அதிகாரம் மட்டுமே காங்கிரசிற்கு முக்கியம். மாநில மக்களை பற்றி கவலைப்படவில்லை.
காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இதனால், தான் காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. தற்போது, காங்கிரசின் கலாசாரத்திலிருந்து வெளியேற மிசோரம் மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., உறுதிபூண்டுள்ளது. சாலை இணைப்பு, நெடுஞ்சாலை, ரயில்வே, விமானம் மற்றும் நீர்வழிப்போக்குவரத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த பிராந்திய வளர்ச்சிக்கு, போக்குவரத்து மூலம் மாற்றம் என்பதே மத்திய அரசின் திட்டம்.
அமைதி மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுகிறது. இந்த பகுதியில் ரயில்வே பணிகளின் வளர்ச்சி 3 மடங்கு அதிகரித்துள்ளது. மிசோரமில் காங்கிரசால் மக்கள் பயன்பெறவில்லை. மாநிலத்தை பற்றியும் காங்கிரஸ் கவலைப்படவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்க ஊழல் அற்ற அரசை மக்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஆதரவையும் ஆசியையும் பா.ஜ., எதிர்பார்க்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மிசோரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி