காமராஜருக்கு மெரினாவில் இடமில்லை….மறுத்த கருணாநிதி….அமைதி காத்த எம்.ஜி.ஆர்

அண்ணா சமாதி அருகே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி. ஆனால், அவருக்கு மெரினாவில் இடம் கிடைத்த விவாதமும், காமராஜர், ஜானகி அம்மாளுக்கு இடம் கொடுக்கவில்லை என்கிற தர்க்கமும் சமூகவலைதளங்களில் ஓய்வில்லாமல் சுழன்றடித்து வருகிறது.

இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து பழைய அரசியல் விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் மூத்த பத்திரிக்கையாளரும், ஊடகவிலயாளருமான ஏழுமலை வெங்கடசேன். இன்றைய காலகட்ட அரசியல் விவரங்களையும் தெளிவாக அறிந்தவர். சமூக வலைதளங்களில் வலம் வரும் மெரினா நினைவிட விவாதம் குறித்து  அவர், ‘’சிவப்பா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் என வடிவேலு பட பாணியில், அதீத நம்பிக்கையோடு ஒரு கூட்டம்தான் இணையத்தில் இருக்கிறது போல..

இப்படிப்பட்டவர்களுக்கென்றே போலிச்செய்திகளை உருவாக்குவதற்கென்றே அமோகமாய் ஒரு கூட்டம்.. அண்மையில் இப்படி போகிற போக்கில் அல்ல, திட்ட மிட்டே அடித்து விடப்பட்ட செய்திகள்தான், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜருக்கும் வி.என்.ஜானகிக்கும் நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கொடுக்காமல் கருணாநிதி மறுத்தார் என்ற விவகாரம். சில பதிவுகளில் ’காமராஜருக்கு மெரீனா கொடுக்க மறுத்த துரோகி கருணாநிதி’ என்று சொல்லியிருந்தனர், ஆனால், காமராஜருக்காக மெரீனாவை கேட்ட அந்த புண்ணியவான்கள் யார் யார் என்று கடைசிவரை சொல்லவில்லை.. பதிவை படித்தவர்களும் அதை கேட்கவில்லை..

                           ஏழுமலை வெங்கடேசன்

1975ல் காமராஜர் மறைந்தபோது அவரது உடலை காங்கிரசுக்கு சொந்தமான தேனாம்பேட்டை திடலில், குடும்பத்தினரின் விருப்பப்படி எரிக்க முடிவு செய்து அதன்படியே நடந்தது. முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான், நாடே போற்றிய தியாகியான காமராஜருக்கு அரசு மரியாதை, அஸ்தியை வைத்து நினைவு மண்டபம் போன்றவற்றை எல்லாம் அமைத்து கௌரவப்படுத்தினார். கருணாநிதியிடம் மெரீனாவில் இடம் கேட்டு மறுத்திருந்தால், அப்போது கருணாநிதிக்கு எதிராய் முதல் ஆளாக அரசியலில் வாளை சுழட்டிக்கொண்டிருந்த எம்ஜிஆர் அமைதியாக இருந்திருப்பாரா? அண்ணா என் தலைவன், காமராஜர் என் வழிகாட்டி என திமுகவில் இருந்துகொண்டே சொன்னவர் ஆயிற்றே எம்ஜிஆர்!


பழ.நெடுமாறன், நடிகர் திலகம் சிவாஜி, மூப்பனார், சோ என காமராஜருக்கு நெருக்கமாக இருந்த யாருமே, பின்னாளில் கருணாநிதிக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் செய்த கால கட்டத்தில்கூட, காமராஜருக்கு மெரீனாவை தர மறுத்தார் கருணாநிதி என்று எங்குமே குற்றம்சாட்டி அவர்கள் யாரும் பேசவில்லை. ஆனால், இந்த தலைவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு ரகசியம், இணையத்தளங்களில் ‘’கலக்கவிடும்’’ எழுத்தாற்றல் மிக்கவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

அடுத்து முன்னாள் முதலமைச்சர் வி.என்.ஜானகி விவகாரம். 1996ல் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற ஆறாவது நாள் ஜானகி காலமானார். பதவியிலிருந்து ஜெயலலிதா இறங்கியிருந்த ஆறாவது நாள் அது. அப்படிப்பட்ட சூழலில் ஜானகிக்கு மெரீனாவில் இடம்கேட்டு கருணாநிதி கொடுக்காமல் போனால் ஜெயலலிதா சும்மா இருந்திருப்பாரா? கருணாநிதிக்கு எதிராக இதுபற்றி எங்காவது ஜெயலலிதா தனது கருத்தை பதிவு செய்திருக்கிறாரா?

’மெரீனாவில் அடக்கம் செய்ய விருப்பம் இருந்தால் கேளுங்கள்.. நாங்களும் கேட்கிறோம்.. அரசு இடம் கேட்டு தராவிட்டால் அதிமுக போராடும்’ என்று ஜானகி குடும்பத்தாரிடம் ஜெயலலிதா சொன்னதும், ’அதெல்லாம் வேண்டாம். ராமாவரம் தோட்டத்திலேயே அடக்கம் செய்துகொள்கிறோம்’ என்று எம்ஜிஆர் குடும்பம் சொன்னதெல்லாம் எத்தனைபேருக்கு தெரியும்?

எம்ஜிஆர், ஜானகி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், எச்.வி.ஹண்டே போன்ற பழைய அதிமுக மூத்த தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்களேன். ஜானகி அம்மாள் மீது தனிப்பட்ட முறையில் மிகவும் மதிப்பு வைத்திருந்த பழகிய தேதிமுக தலைவர் விஜயகாந்த் போன்றவர்கள்கூட இப்படியொரு குற்றச்சாட்டை எந்தக்காலத்திலும் வைத்ததில்லையே.

இதுதொடர்பாக கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணம் என்னவென்று பார்க்க ஆசையாக இருக்கிறது. எப்போதுதான் கண்ணில் காட்டுவார்களோ?’’ என்கிறார்.

Sharing is caring!