காஷ்மீர் குறித்த பாதுகாப்பு ஆலோசகரின் பேச்சுக்கு எதிர்ப்பு

புதுடில்லி:
தனிச்சட்டம் இருப்பது நடைமுறையில பிறழ்வது போன்றது என்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

”ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கென, தனி சட்டம் இருப்பது, நடைமுறையில் இருந்து பிறழ்வது போன்றதாகும்; நாட்டின் இறையாண்மையை நீர்த்து போகச் செய்தல் கூடாது,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

டில்லியில் சுதந்திர போராட்ட வீரர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இறையாண்மை உள்ள ஒரு நாட்டை உருவாக்க, அரசியல் சாசனம் உருவாக்கப்படுகிறது. இது, ஒட்டு மொத்த நாட்டுக்கு பொதுவான விஷயம்.ஜம்மு – காஷ்மீர் விஷயத்தில், நம் அரசியல் சாசனம் முழுமையானதாக இல்லாமல், அங்கு வேறு அரசியல் சாசனம் அமலில் இருந்தால் அது, வழக்கமான நடைமுறையில் இருந்து பிறழ்வது போன்றதாகும்.

இது, நாட்டின் இறையாண்மையை நீர்த்து போகச் செய்யும் செயல். இவ்வாறு அவர் பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கென சிறப்பு அதிகாரங்கள், உரிமைகள் வழங்கும், அரசியல் சாசன பிரிவு, 370க்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்த பிரிவுக்கு எதிரான கருத்தை, அஜித் தோவல் கூறியிருப்பதற்கு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘அஜித் தோவலின் கருத்தை, அரசு ஆதரிக்கிறதா’ என, அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!