கீரனூர் அருகே துப்பாக்கிச்சுடும் போட்டி தொடக்க விழா

புதுக்கோட்டை:
கீரனூர் அருகே 4 நாட்கள் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி துவக்க விழா நடந்தது.

கீரனூர் அருகே ஆவராங்குடிபட்டியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஆவராங்குடிபட்டியில் 14 ஏக்கர் பரப்பளவில் மகாராஜா சூட்டிங் ரேன்ஜ் என்ற பெயரில் சர்வதேச தரத்துடன் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.

இதை புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ராஜகோபால தொண்டைமான் உருவாக்கினார். இந்த மையத்தில் மாநில அளவிலான 44-வது ஷாட்கன் துப்பாக்கி சுடும் போட்டிகள் தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளை மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ துப்பாக்கியால் இலக்கை சுட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்த பயிற்சி மையம் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், பல வசதிகளுடனும் இருப்பதை பார்த்து வியந்துபோனேன். இந்த பயிற்சி மையம் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் பாராட்டுகிறேன்” என்றார்.

ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் கழக செயலாளர் ரவிகிருஷ்ணன், தேசிய ரைபிள் கழக பொதுச்செயலாளர் சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 144 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!