குடிநீர் திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசுக்கு வட்டியில்லா கடன் வழங்கிய ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட் நிர்வாகம்

மும்பை:
குடிநீர் திட்டத்திற்காக ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட் மகாராஷ்டிரா அரசுக்கு வட்டியில்லா கடன் வழங்கியுள்ளது.

குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மஹாராஷ்டிரா மாநில அரசு, ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்டிடம் 500 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் ஷீரடி கோவிலுக்கு தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலத்தில் இந்த எண்ணிக்கை 3.5 லட்சத்தை தொடும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், நீர்பாசன திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அந்த திட்டம் முடங்கியது. இதையடுத்து முதல்வர் பட்நாவீஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட்டிடம் ரூ.500 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்படடது.

இதையேற்று கொண்ட டிரஸ்ட் தலைவரான பா.ஜ.,வை சேர்ந்த சுரேஷ் ஹவாரே, ரூ.500 கோடி கடன், வட்டியில்லாமல் வழங்க ஒப்புதல் வழங்கினார். இதற்கு முன், இவ்வளவு பெரிய தொகையை வட்டியில்லாமல் டிரஸ்ட் கடன் வழங்கியது கிடையாது.

கடனை திருப்பி செலுத்துவதற்கும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்படவில்லை. கடன் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. நீர்பாசன திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,200 கோடியாகும். டிரஸ்ட் ரூ.500 கோடி கடன் வழங்க உள்ளது. நீர்பாசன துறை இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்க உள்ளது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!