குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்த்தால்

ஏறாவூர்ப்பற்று – பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்படவுள்ள குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இக்குடிநீர் தொழிற்சாலையால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் அதற்கெதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத்திட்டம் அமையவுள்ளது.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக காணப்படும் இப்பகுதிகளில் காணப்படும் சிறியளவு நீரையும் பெற்று இவ்வாறு தொழிற்சாலை அமைப்பதானது, அம்மக்களை மேலும் சிரமத்திற்குள் தள்ளுவதாகவே அமையுமென தெரிவித்தே மேற்படி தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இத்தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் இரசாயனக்கழிவுகள் மூலம் விவசாய நிலங்கள் பாதிப்படைவதோடு சுற்றாடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டு பல வகையான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

இத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பல போராட்டங்களும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை பற்றி தகவல் கோரப்பட்டதில், 83 கிராமங்கள், 11 கிராமசேவகர் பிரிவுகள், 4500இற்கு மேற்பட்ட குடும்பங்கள், 15500இற்கு மேற்பட்ட மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவர் என்பதை வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு பாதிப்பு ஏற்படுவதை வேடிக்கை பார்க்க முடியாதென குறிப்பிட்ட வியாழேந்திரன், இச்செயற்பாட்டிற்கு எதிராக அனைவரும் அணிதிரண்டு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Sharing is caring!