குடிநீர் வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மீன்சுருட்டி:
காலி குடத்துடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.

மீன்சுருட்டி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள சம்போடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100–க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதற்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி வந்தனர்.

இந்நிலையில் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் வினியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் இது நாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திருச்சி–சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஊராட்சி செயலாளர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் மின்மோட்டார் உடனடியாக சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!