குப்பைத் தொட்டியில் மனித மண்டையோடுகள்… திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி:
குப்பைத் தொட்டியில் மனித மண்டையோடுகளும், எலும்புகளும் இருந்தது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியநகர் பகுதியில் மாநகராட்சி குடிநீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகில் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நீரேற்று நிலையத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் சிலர் வந்தனர்.

அப்போது குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் ஒரு பெரிய துணிப்பை கிடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் பைக்குள் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் அதை திறந்து பார்த்துள்ளனர். அதில் 4 மனித மண்டை ஓடுகள், கை, கால்களின் எலும்புகள் இருந்தன. அவற்றில் ஒரு மண்டை ஓட்டின் நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான் இந்த செய்தி காட்டுத்தீ போல் அந்த பகுதி முழுவதும் பரவி உள்ளது.

குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் தினமும் காலை வேளையில் மாநகராட்சி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருமாம். எனவே, குப்பையோடு குப்பையாக கொண்டு செல்லப்பட்டு விடும் என்ற எண்ணத்தில், நள்ளிரவு வேளையில் மண்டை ஓடுகள், எலும்புகளுடன் கூடிய பையை மர்ம நபர்கள் யாரேனும் வீசிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கே.கே.நகர் போலீசார் மண்டை ஓடுகள், எலும்புகளை எடுத்துச்சென்று விசாரித்து வருகிறார்கள். குப்பையில் வீசப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள் பற்றிய மர்மம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!