குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் கனிமம்?

புதுடில்லி:
குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய கனிம பொருள் கலந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நிறுவனமான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ்’ விற்பனை செய்து வரும், பவுடர் சாம்பிள்களில், புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம், ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் பவுடர், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. குழந்தைகளின் உடலில் பூச பயன்படும் இந்த பவுடர் சாம்பிள்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ எனப்படும், புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய கனிம பொருள் சிறியளவில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் தலைமையகம் உள்ள, ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம், சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து, ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக சரிந்து வருகிறது.

இதுகுறித்து ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை விபரம்: எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பவுடரை வைத்து, ஒரு லட்சம் ஆண் – பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பவுடர் பயன்படுத்துவதால், புற்று நோய் ஏற்படாது என்பது, அந்த சோதனைகளில் தெளிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜான்சன் நிறுவன பவுடர் சாம்பிளை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!