கூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு

கூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொருப்பில் உள்ள சில அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் ஆண்டிராய்டு மென்பொருளை உருவாக்கிய ஆண்ட்டி ரூபினும் அடங்குவார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என முடிவு செய்த பிறகும் கூகுள் நிறுவனம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் தொகையையும் முழுமையாக வழங்கியது.

கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரிவில் உள்ள இயக்குனர் டிவால் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கூகுள் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் இயக்குனராக நீடித்தார். #மீடூ பதிவில் அவருடைய பாலியல் தொந்தரவு குறித்து பதிவுகள் வரத் தொடங்கியதால் அவரே தனது பதவியை ராஜினாமா செய்தார். கூகுள் நிறுவனம் அவருடைய பரிசுத் தொகையையும் வழங்கி உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கூகுள் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “நான் ஊழியர்களின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் நன்கு புரிந்துக் கொண்டேன். பொதுவாக நீண்ட காலமாக சமூகத்தில் நீடித்த பிரச்னை கூகுள் நிறுவனத்திலும் தொடர்ந்தது. இனி இந்நிலை மாறும் என நான் உறுதி அளிக்கிறேன். இதுவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 13 மூத்த நிர்வாகிகள் உள்ளீட்ட 48 ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என அறிவித்தார்.

சுந்தர் பிச்சையின் இந்த விளக்கம் கூகுள் குழும ஊழியர்களுக்கு மேலும் அதிருப்தியை அளித்தது. அதை ஒட்டி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தனர். அதன் ஒரு பகுதியாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பனியாற்றும் கூகுள் ஊழியர்கள் நேற்று பணி புரியாமல் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Sharing is caring!