கூட்டணி… காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி

புதுடில்லி:
கூட்டணி… கூட்டணி… கண்ணா கூட்டணி… காங்கிரசும் தெலுங்கு தேசமும் கூட்டணியாகி இருக்காங்க.

வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசும் தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் பா.ஜ., அல்லாத மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா தேர்தலுக்கு முன் மெகா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ., வை வீழ்த்த திட்டமிட்டுள்ளார்.

முதல்கட்ட பேச்சுவார்த்தையை துவக்க அவர் டில்லி சென்றார்.
முதலில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த அவர், பின்னர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும் சந்தித்தார். இதையடுத்து காங்., தலைவர் ராகுல் வீட்டிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அவரை சந்தித்து பேசினார்.

அப்போது, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். கூட்டணி தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

நாட்டை, ஜனநாயத்தை காக்க வேண்டியுள்ளது. இதற்காக கடந்த காலங்களை மறக்க வேண்டியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். காங்கிரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம். நாங்கள் பொதுவான திட்டத்தை வைத்து செயல்படுவோம். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை ராகுல் ஆதரிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில், ஜனநாயகத்தை காக்க வேண்டியுள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற சந்திரபாபுவுடன் இணைந்து செயல்படுவோம். பா.ஜ.,வை வீழ்த்த ஒத்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!