கேரளாவுக்கு 7 கோடி….ஆப்பிள் நிறுவனம் வழங்கியது

பெரு மழைவெள்ளம் மற்றும் நிலாச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ. 7 கோடியை நிவாரணமாக ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதோடு ஐ-டியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோரிலும் நிதி அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை, நிலச்சரிவு என பெரும் பாதிப்புகளை சந்தித்து பலதரப்பட்ட உதவிகளின் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் கேரளாவுக்கு ரூ.7 கோடி வழங்குவதாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களையும் பதிவிட்டுள்ளது.

உலக அளவில் பல்வேறு பேரிடர்களுக்கு நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் பலமுறை ஐடியூன்ஸ் ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களை பயன்படுத்தி வந்துள்ளது. கேரளாவுக்கு உதவ ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!