கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 10.3 மில்லியன் யென் ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 10.3 மில்லியன் யென்னை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முக்கிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஜப்பான் தனது நிதியிலிருந்து 10.3 மில்லியன் யென்னை ஒதுக்குவது குறித்து வெள்ளிக்கிழமை நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஷின்சே அபே தெரிவித்தார்.

அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு பாதுக்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே ஜப்பான் இந்த முடிவினை எடுத்துள்ளது.

ஏற்கனவே ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது.

3,711 பேருடன் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1355 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு 60,000பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!