கோவா முதல்வர் உடல்நலன் குறித்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல்

பனாஜி:
கோவா முதல்வர் உடல் நிலை குறித்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள, பொது நலன் வழக்கில், கோவா அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற அவர், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஜானோ டிமெல்லோ என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளையில், பொதுநலன் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில், ‘முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதனால், அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து, மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:இந்த வழக்கில், பொதுநலன் ஏதுமில்லை. முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறுவதில் உண்மை இல்லை.

தொடர்ந்து, அமைச்சரவை கூட்டங்கள், அரசு திட்டங்கள் தொடர்பான கூட்டங்களில், முதல்வர் மனோகர் பரீக்கர் பங்கேற்று வருகிறார். தனது உடல்நிலை குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, தனிமனித உரிமையை மீறும் வகையில் உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!