கோவா முதல்வர் மீது பணிச்சுமையை திணிக்காதீங்க… திணிக்காதீங்க!!!

பனாஜி:
உடல்நிலை சரியில்லாத கோவா முதல்வர் மீது பணி சுமையை திணிக்க கூடாது என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

‘கோவாவில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில், மனோகர் பரீக்கர் முதல்வராக உள்ளார். கணைய பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரீக்கர் தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.

‘உடல் நலக்குறைவால், பரீக்கரால் அரசு நிர்வாகத்தை கவனிக்க முடியவில்லை; எனவே, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் கோவாவில் நடந்து வரும் பாலம் கட்டுமான பணிகளை பரீக்கர் பார்வையிட்டார்.

அந்த புகைப்படங்களை மாநில அரசு வெளியிட்டது. இது குறித்து, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா கூறியதாவது:

மனோகர் பரீக்கரின் மூக்கு வழியாக, செரிமான பகுதிக்கு குழாய் செருகப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை பணியில் ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். அவர் பணி செய்வதை காண்பிக்க, புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது முறையன்று.

தன் உடல்நிலையை கவனித்துக் கொள்ள, பரீக்கரை அனுமதிக்க வேண்டும். பணி சுமை, அழுத்தம் அவரை பாதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!