சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்
சபரிமலை ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்திற்குள் பெண்களை அனுமதிப்பதற்கு திருவாங்கூர் தேவஸ்வம் சபை தீர்மானித்துள்ளது.
சர்ச்சக்குரிய இந்திய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, நேற்று கூடிய திருவாங்கூர் தேவஸ்வம் சபை இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வேண்டாம் என மாநில அரசின் தீர்மானத்தையும் தேவஸ்வம் சபை ஏற்றுக்கொள்வதாக சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களைத் தடுக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், கேரளாவில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக தற்போது மீள் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுவதால் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் திருவாங்கூர் தேவஸ்வம் சபை அறிவித்துள்ளது.
ஆகவே, மகரஜோதி மண்டல பூஜைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி நிலக்கல் மற்றும் பம்பையில் தேவையான வசதிகள் முன்னெடுக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்வம் சபை குறிப்பிட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்திய இளம் சட்டத்தரணிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கமைய சபரிமலை தேவஸ்தானத்திற்குள் செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், இந்தத் தீர்ப்பானது நூற்றாண்டு கால பாரம்பரியத்தை சீர்குழைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாரத தேசத்தில் மட்டுமன்றி இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கண்டனங்கள் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது