சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி

ஏமனில் திருமண வீட்டில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் அபெட்ரபோ மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. வரைமுறையின்றி இந்த படைகள் தாக்குவதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் விவகாரத்தில் கூட்டுப் படை தலையிட்ட பிறகு 6,600- பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கண்டனம் தெரிவித்து வருகிறது. இருப்பினும் தாக்குதலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.ஏமனின் வடக்குப் பகுதி சடா மாகாணத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்த வீட்டில் சவுதியின் கூட்டுப் படைகள் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தின.

இதில் 11 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். மணமக்கள் உயிர்பிழைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து சவுதி தரப்பிலிருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Sharing is caring!