சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தப்படுகிறது

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) காணாமற்போன சம்பவம் காரணமாக சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், காணாமற்போன சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி உயிரிழந்திருக்கக்கூடும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமற்போன ஊடகவியலாளர் ஜமால் கஷோஜியைக் கண்டறியும் முகமாக இஸ்தான்புல்லுக்கு வௌியே உள்ள காடுகளிலும் மர்மரா (Marmara) கடல் பிரதேசத்திலும் துருக்கிய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

சவுதி ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் குறித்த பகுதிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக துருக்கிய பொலிஸார் கூறியுள்ளனர்.

இம்மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி காணாமற்போயுள்ளார்.

Sharing is caring!