சாதனை… உலக சாதனை படைத்துள்ளார் மேரி கோம்

புதுடில்லி:
சாதனை… சாதனை… உலக சாதனை படைத்துள்ளார் மேரி கோம். 6வது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அசத்திய இந்தியாவின் மேரி கோம் ஆறாவது தங்கம் வென்றார். இதன் மூலம், அதிக தங்கம் வென்ற வீராங்கனை என உலக சாதனை படைத்தார்.

இந்தியாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ‘லைட் பிளைவெயிட்’ 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒஹோடாவை சந்தித்தார்.

துவக்கம் முதலே அபாரமாக செயல்பட்டார் மேரி கோம். இவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹன்னா திணறினார். மூன்று சுற்று முடிவில் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஆறாவது தங்கத்தை (2002, 05, 06, 08, 10, 18) வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக 6 தங்கம், ஒரு வெள்ளி (2001) வென்றுள்ளார்.

இதையடுத்து உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கம் (6) வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்தார் மேரி கோம். இதற்கு முன், அயர்லாந்தின் காடி டெய்லர் ஐந்து தங்கம் கைப்பற்றியதே அதிகமாக இருந்தது.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில்,” எனது செயல்பாட்டை நேரடியாக பார்த்து ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி. ரசிகர்களின் அன்புக்கு கைமாறாக தங்கம் வெல்வதை தவிர வேறு எதுவும் தர முடியாது. 2020ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கனவில் உள்ளேன்,” என்றார்.

57 கி.கி., பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை சோனியா, ஜெர்மனியின் கேப்ரியலா வானரை எதிர் கொண்டார். முதல் சுற்றில் சோனியா அதிகமான குத்துகளை வாங்கினார். இரண்டாவது சுற்றிலும் ஏமாற்றிய இவர், கேப்ரியலா விட்ட குத்துகளால் கீழே சரிந்தார். மூன்றாவது சுற்றில் போராடியபோதும் கேப்ரியலாவை சமாளிக்க முடியவில்லை.

முடிவில், சோனியா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இருப்பினும், முதல் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!